செம்பாக்கம் கிராமத்தில் இருதரப்பு மோதலை தடுக்க முயன்ற வாலிபரை ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
⚠️ வாக்குவாதத்தை தடுத்த வாலிபர்
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரியா (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெளியே நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் தங்களுக்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதை கவனித்த சூரியா, இருவரையும் சமாதானப்படுத்தி தடுத்து நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
👊 ஆத்திரத்தில் தாக்குதல்
தங்களை தடுக்க வந்த சூரியா மீது ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர், அவரை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் சூரியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்த அங்கிருந்தவர்கள், காயமடைந்த சூரியாவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
👮 போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சூரியாவை தாக்கிவிட்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். இருதரப்பு மோதலை தடுக்க முயன்ற வாலிபர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திரைப்படத்தில் சண்டை போட்டுக்கொள்ளும் சகோதரர்களை சமாதானப்படுத்த நடிகர் வடிவேலு செல்வார். அவரை போகவேண்டாம் என ஏற்கனவே அவர்களிடம் அடிவாங்கிய நபர் அட்வைஸ் செய்வார். ஆனால் அதை ஏற்க மறுக்கும் வடிவேலு அவர்களை சமாதானம் செய்ய முயன்று ரத்த காயங்களுடன் திரும்பி வருவார். இதனால்தான் எங்கே சண்டை நடந்தாலும் நிறைய பேர் கண்டுகொள்வதில்லை போலும் என புலம்புவார். அந்த படத்தை ஞாபகம் செய்வது போல் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.












