தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள காமராஜபுரம் பகுதியில் நீண்ட நேர மின்வெட்டைக் கண்டித்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில், நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய பதிலும் நடவடிக்கையும் கிடைக்கவில்லை எனக் கூறி, ஆத்திரமடைந்த பெண்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம் – வேளச்சேரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஆவேசமாக பேசுகையில், “யாரை நம்பி ஓட்டுப் போட்டோம்? 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம். நாளை தேர்வு எழுதப் போகும் மாணவர்கள் படிக்க முடியாமல் இருக்கிறார்கள். எம்.எல்.ஏ., கவுன்சிலர், மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து பதில் சொல்ல வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.
பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சீர்செய்ய முயன்றனர்.




