Advertisement

ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் சாப்பிட்ட 97 பெண் தொழிலாளர்கள் உடல்நலக்குறைவு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கார் உதிரிபாக தொழிற்சாலையில் மதிய உணவு சாப்பிட்ட 97 பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

அந்த தொழிற்சாலையில் ஷிப்ட் அடிப்படையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் மதிய உணவாக சிக்கன் பிரியாணி மற்றும் வெஜ் பிரியாணி வழங்கப்பட்டது.

Advertisement

உணவு உட்கொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு முதலில் சில தொழிலாளர்களுக்கு வாந்தி, தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து மேலும் பலருக்கும் இதேபோன்ற அறிகுறிகள் தென்பட்டதால் தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் 97 பெண் தொழிலாளர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் மினி வேன்கள் மூலம் பென்னலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் உடல்நிலை பாதிப்பு அதிகமாக இருந்த ஐந்து பேருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற தொழிலாளர்களுக்கு வெளிநோயாளிகள் பிரிவில் முதலுதவி மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் எஸ்.பி.கே. தென்னரசு, ஸ்ரீபெரும்புதூர் சார் ஆட்சியர் நல்லசிவன் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களின் உடல்நிலையை கேட்டறிந்தனர். மேலும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தி, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். உணவு விஷத்தன்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement