சிங்கபெருமாள் கோவில் அருகே சொத்து பிரிப்பது தொடர்பான தகராறில், தம்பியின் தலையில் அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
⚔️ சொத்து பிரிப்பில் தகராறு
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் வடக்கு மாட வீதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (41). இவரது சகோதரர் ஹரிகிருஷ்ணன் (46). இருவருக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
🚨 தம்பியின் தலையில் வெட்டு
இதில் ஆத்திரமடைந்த ஹரிகிருஷ்ணன், தான் வைத்திருந்த கத்தியால் சந்திரசேகரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயமடைந்த சந்திரசேகர், ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
👮 போலீசார் தேடுதல் வேட்டை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியை கத்தியால் வெட்டிவிட்டு தலைமறைவான ஹரிகிருஷ்ணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து தகராறில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












