Advertisement

கல் குவாரி லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக புகார்!

மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் அதிகபாரம் ஏற்றி செல்லும் கல் குவாரி லாரிகளால் சாலைகள் சேதமடைந்து, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

🚛 அதிகபாரம் ஏற்றும் லாரிகளால் பாதிப்பு
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் வீரப்பன் தலைமையில் விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இப்பகுதிகளில் விவசாய நிலங்களில் ஏரி, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் மூலம் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கல் குவாரிகளில் இருந்து விதிகளை மீறி அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் தொடர்ந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் கூறினர். அதிகபாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணித்து, அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

⚡ மின் மோட்டார், மின்மாற்றிகள் திருட்டு
மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின் மோட்டார்கள் மற்றும் மின்வாரியத்திற்கு சொந்தமான மின்மாற்றிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் போலீசார் சுணக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டினர். மேலும், நெல் அறுவடைக்கு தயாராகி வருவதால், விவசாயிகளின் நலன் கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய இடங்களில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

🌾 ஏரி, குளம் மற்றும் கால்வாய்களை பராமரிக்க கோரிக்கை
கரும்பாக்கம் கிராமத்தில் உள்ள குளம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருப்பதாகவும், பொன்விளைந்தகளத்தூர் ஏரி நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், நீஞ்சல் மடுவிலிருந்து களத்தூரான் கால்வாய் வழியாக ஏரிக்கு வரும் தண்ணீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினர். கால்வாயில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுக்க வேண்டும், ஏரி மற்றும் குளங்களை தூர்வாரி நீர்வரத்து மற்றும் சேமிப்பை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர் வீரப்பன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement