ஆர்ஆர்பி குரூப்-டி தேர்வுக்கு இலவச பயிற்சி; ஜூன் 20 முதல் செங்கல்பட்டில் துவக்கம்

0
2

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நடத்தும் குரூப்-டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஆர்ஆர்பி குரூப்-டி தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், தேர்வர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் ஜூலை 4 மற்றும் ஜூலை 11 ஆகிய தேதிகளில் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 94868 70577 மற்றும் 93447 38148 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.