கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் வெயில் மற்றும் மழையில் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
🚌 முக்கிய பேருந்து நிறுத்தம்
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் பழைய கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி, அணுசக்தித் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்காக தினமும் ஏராளமான பயணியர் இங்கு காத்திருக்கின்றனர்.
☀️ 10 ஆண்டுகளாக நிழற்குடை இல்லை
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை அணுமின் நிலையம் சார்பில் இங்கு நவீன பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. பின்னர், சாலை விரிவாக்கப் பணிகளுக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் அந்த நிழற்குடை அகற்றப்பட்டது. சாலை பணிகள் நிறைவடைந்த பிறகு, அதே இடத்தில் மீண்டும் நிழற்குடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சி தடைப்பட்டதாக தெரிகிறது.
🏗️ அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை தேவை
நிழற்குடை இல்லாததால், பயணியர் கடும் வெயிலிலும், மழையிலும் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை நேரில் ஆய்வு செய்து, பயணியர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதிய பயணியர் நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












