செங்கல்பட்டு ராட்டினம் கிணறு மேம்பால ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக சென்று அடிக்கடி நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
🚦 போலீசார் இல்லாததால் நெரிசல்
செங்கல்பட்டு நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500-க்கும் அதிகமான கடைகள், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் செங்கல்பட்டு நகருக்கு வந்து செல்கின்றனர். பிரதான செங்கல்பட்டு–மதுராந்தகம் சாலையில் ராட்டினம் கிணறு, அரசு மருத்துவமனை சந்திப்பு, புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் மணிகூண்டு சந்திப்பு ஆகிய பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.
⚠️ தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
இந்நிலையில், ராட்டினம் கிணறு மேம்பால ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பாதசாரிகள் சாலையை கடக்கும்போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் சாலை சந்திப்பில் ஒரு போக்குவரத்து போலீசார் மட்டுமே பணியில் இருந்து போக்குவரத்தை சீரமைத்து வருவதாகவும், நகரின் மற்ற முக்கிய சந்திப்புகளில் போதிய போலீசார் பணியில் இருப்பதில்லை என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
🚔 விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை
வாகன ஓட்டிகள் கூறுகையில், ராட்டினம் கிணறு ரவுண்டானா பகுதி ஏற்கனவே விபத்து அபாயம் நிறைந்த இடமாக உள்ளது. கடந்த ஆண்டு இப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவமும் நடைபெற்றது. எனவே, முக்கிய சந்திப்புகளில் குறிப்பாக ராட்டினம் கிணறு மேம்பால ரவுண்டானாவில் போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக பணியில் ஈடுபடுத்தி, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












