Advertisement

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகம்: மனுதாரர் மீது தாக்குதல்; செய்தியாளருக்கு ஆட்சியர் மிரட்டல்!

செங்கல்பட்டு குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுக்க வந்தவரை போலீஸ் தாக்கியதும், வீடியோ எடுத்த செய்தியாளரை மாவட்ட ஆட்சியர் மிரட்டியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில், தனது நில ஆக்கிரமிப்பை மீட்டுத் தரக் கோரி நீதி கேட்க வந்த நபரை காவல் ஆய்வாளர் பிடித்து வெளியே தள்ளியதும், இச்சம்பவத்தை வீடியோ பதிவு செய்த செய்தியாளரை மாவட்ட ஆட்சியர் மிரட்டும் தொனியில் எச்சரித்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தாம்பரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவருக்குத் திருப்போரூர் வட்டம் காயர் கிராமத்தில் 2 ஏக்கர் 18 சென்ட் நிலம் உள்ளது. இதில் 18 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, நிலத்தை முறைப்படி அளந்து பட்டா வழங்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மகேஷ்குமார் மனு அளித்துள்ளார். நிலத்தை அளக்க இருமுறை அரசுக்குக் கட்டணம் செலுத்தியும் ஒன்றரை ஆண்டுகளாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத விரக்தியில், ஆட்சியர் வீரப்பனிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அவர் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முந்தைய மனுக்களின் மீது உரிய கள விசாரணை நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக நிலம் இல்லை என முடித்து வைத்ததாகக் கூறி மகேஷ்குமார் ஆவேசமாக முறையிட்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மருதப்பன் என்பவர், மனு அளிக்க வந்த மகேஷ்குமாரின் சட்டையைப் பிடித்துக் கழுத்தை நெரித்து வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது. அதே வேளையில், இச்சம்பவத்தை நேரில் படம் பிடித்த ஊடகச் செய்தியாளரைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் வீரப்பன், “என் அனுமதியில்லாமல் எப்படி வீடியோ எடுக்கலாம்?” எனக் கூறி செய்தி சேகரிக்க விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமார், “வருவாய்த்துறையில் உள்ள முறைகேடுகள் குறித்து மனு அளித்தால், அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தாமல் நீதிமன்றத்திற்குப் போகுமாறு அலைக்கழிக்கின்றனர். மக்கள் பிரதிநிதியாக இருந்து நியாயம் வழங்க வேண்டிய ஆட்சியர், காவல்துறையை வைத்து பொதுமக்களை வெளியே தள்ளுகிறார்” எனக் குற்றம்சாட்டினார். பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் முகாமில் மனுதாரர் மீது நடத்தப்பட்ட அத்துமீறலும், உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வர முயன்ற செய்தியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் தலைமை அதிகாரி விடுத்த மிரட்டலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement