Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லை: நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ப.சிதம்பரம் வாதம்!

பொதுத்தேர்தலில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடத்துவது சாத்தியமில்லை என நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் ப.சிதம்பரம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை வரும் 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது செயல்படுத்துவது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் (JPC) ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக எம்.பி பி.பி.சௌத்ரி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த ப.சிதம்பரம், இந்த சட்ட வரைவு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் முற்றிலும் எதிரானது எனக் குறிப்பிட்டார். 5 ஆண்டு காலத்திற்கு மக்களால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தைக் கட்டாயப்படுத்தி பாதியிலேயே குறைப்பது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயல் என்றும், இதற்குத் தனது மனசாட்சி துளியும் இடம்கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டாலும் கூட, மசோதாவின் விதிகளின்படி ‘குறிப்பிட்ட தேதி’ என்பது ஒரு பொதுத்தேர்தலுக்குப் பிந்தைய தேதியாக மட்டுமே அமைய முடியும் என்பதைச் சுட்டிக்காட்டினார். அடுத்த பொதுத்தேர்தல் 2029-ல் நடைபெற உள்ள நிலையில், அந்த ஆண்டிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சட்டரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் சாத்தியமற்றது என்றும், இந்த ஆபத்தான திட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய அளவில் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement