தாய்லாந்தில் இருந்து உணவு பாக்கெட்டுகளில் மறைத்து ₹14.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவைக் கடத்தி வந்த வடமாநிலப் பெண்ணைச் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட சுமார் ₹14.5 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 14.5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருளைச் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகளுக்குள் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்து எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் பயணியை அதிகாரிகள் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை சர்வதேச வருகை முனையத்தில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாங்காக்கில் இருந்து சென்னை வந்து இறங்கிய பயணிகள் வரிசையில் வந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநிலப் பெண் மீது அதிகாரிகளுக்குப் பலத்த சந்தேகம் எழுந்தது. சுற்றுலாப் பயணியாகத் தாய்லாந்து சென்றுவிட்டுத் திரும்பிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துப் பதற்றமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் பயணியைச் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற பெண் அதிகாரிகள், அவரது உடைமைகளைத் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அவரது பெட்டிக்குள் தாய்லாந்து நாட்டின் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்டுகள் அடுக்கப்பட்டிருந்தன. அந்த பாக்கெட்டுகளைப் பிரித்துச் சோதனையிட்டபோது, உணவுப் பொருட்களுக்கு அடியில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட உயர்ரக ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ மறைத்து வைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. அவரிடமிருந்து மொத்தம் 14.5 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட பெண் பயணியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய ‘கடத்தல் குருவியாக’ (Courier) செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும் சுங்கத்துறையின் சோதனைகளில் சிக்காமல் வெற்றிகரமாகப் போதைப் பொருட்களைக் கடத்திய அனுபவம் இருந்ததால், இவரிடம் ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவிலான போதைப் பொருட்களை சர்வதேச கும்பல் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. இந்த போதைப்பொருள் சென்னையில் உள்ள எந்த நெட்வொர்க்கிடம் ஒப்படைக்கக் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












