Advertisement

NTR to MGR ஆளுநரால் ஆட்சி கலைப்பு.. அரசியலை உலுக்கிய வரலாறு!

இந்திய அரசியல் வரலாற்றில், மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்ற சில மாநில அரசுகள் ஆளுநரின் நடவடிக்கையால் கலைக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி பின்னர் முதலமைச்சர்களான என்.டி.ராமாராவும், எம்.ஜி.ஆரும் எதிர்கொண்ட அரசியல் நெருக்கடிகள் இந்திய அரசியலையே அதிரவைத்தன.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய என்.டி.ராமாராவ், 1982ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார். அடுத்த ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 1984ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்நேரத்தில் நிதியமைச்சராக இருந்த நதேந்தலா பாஸ்கரராவ், தமக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க கோரினார்.

Advertisement

அப்போது ஆளுநராக இருந்த தாக்கூர் ராம் லால், என்.டி.ஆர் அரசை கலைத்து பாஸ்கரராவை முதலமைச்சராக பதவியேற்கச் செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உடனடியாக இந்தியா திரும்பிய என்.டி.ஆர், தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் போராட்டம் நடத்தினார். சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்காமல் அரசு கலைக்கப்பட்டதற்கு எதிராக மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் தலையிட்டு, என்.டி.ஆரை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கச் செய்தார். அதோடு ஆளுநரும் மாற்றப்பட்டார்.

தமிழகத்தில், எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. ஆனால் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்திய அரசு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி எம்.ஜி.ஆர் அரசை கலைத்தது. “நான் என்ன குற்றம் செய்தேன்?” என்ற கேள்வியுடன் மக்களை சந்தித்த எம்.ஜி.ஆர், மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.

Advertisement

இந்நிலையில் தற்போது நடிகர் விஜயின் அரசியல் எழுச்சியையும் இந்த சம்பவங்களுடன் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த தலைவர்களுக்கு ஆட்சி அமைப்பதில் பல்வேறு அரசியல் சவால்கள் ஏற்பட்டுள்ளன என்பது மீண்டும் விவாதமாகியுள்ளது

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement