சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான தமிழக அரசு பட்ஜெட் முற்றிலும் ஏமாற்றம் அளிப்பதாகவும், எந்தவித புதிய தொலைநோக்குத் திட்டங்களும் இல்லாத ‘புஸ்வாண’ பட்ஜெட்டாக அமைந்துள்ளதாகவும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு ‘வேஸ்ட் வேஸ்ட்’ எனச் சொல்லும் அளவிற்கே அமைந்துள்ளதாகத் தமது அறிக்கையில் அவர் சாடியுள்ளார். மேலும், முந்தைய அரசின் நலத்திட்டங்களுக்குப் பெயர்களை மட்டுமே மாற்றி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் அன்றாடம் சந்திக்கக்கூடிய விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு இதில் தீர்வு காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உதவித் தொகை மற்றும் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு பிரதான வாக்குறுதிகள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தவொரு தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெளியிடப்பட்டுள்ள இந்த பட்ஜெட், சுரத்தில்லாத அறிக்கையாக அமைந்துவிட்டது என அரசியல் களத்தில் அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.













