மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெறும் 5-வது சர்வதேச காற்றாடி திருவிழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
🪁 மாமல்லபுரத்தில் கோலாகலமாக தொடங்கிய காற்றாடி திருவிழா
தமிழக சுற்றுலாத்துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக்கழக மைதானத்தில் 5-வது சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கியது. இந்த விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் மற்றும் சுற்றுலாத்துறை ஆணையர் ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் காற்றாடி திருவிழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, தினமும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லாமல் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
🌎 வெளிநாடுகளைச் சேர்ந்த காற்றாடி வல்லுநர்கள் பங்கேற்பு
இந்தியாவின் பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த காற்றாடி வல்லுநர்களுடன், இந்தோனேசியா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் நினைவுப் பரிசுகளை வழங்கினார். சர்வதேச அளவிலான காற்றாடி கலைஞர்களின் பங்கேற்பு, இந்த ஆண்டுக்கான திருவிழாவை மேலும் சிறப்பாக்கியுள்ளது.
🎨 வானில் பறந்த வண்ணமயமான பட்டங்கள்; மகிழ்ச்சியில் சிறுவர்கள்
இந்திய தேசியக் கொடி, ஆமை, டால்பின், ஆக்டோபஸ், மிக்கி மவுஸ், சூப்பர்மேன், டிராகன் மற்றும் பல்வேறு கார்ட்டூன் வடிவங்களில் உருவாக்கப்பட்ட வண்ணமயமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. மாலை நேரத்தில் எல்.இ.டி. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பட்டங்களும் பறக்கவிடப்பட உள்ளன.
பெற்றோருடன் வந்திருந்த சிறுவர்கள் ஆர்வத்துடன் பட்டங்களைக் கண்டு ரசித்தனர். விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருவிழாவைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருவார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.













