மகேந்திரா சிட்டி அருகே கோர விபத்து; இருசக்கர வாகன ஓட்டுநர் பலி

0
2

செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி சந்திப்பில் இன்று (ஜூன் 13) அதிகாலை நடைபெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (52), இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை சுமார் 4:30 மணியளவில் மகேந்திரா சிட்டி சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஐஷர் லாரி ஒன்று அவரது வாகனத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணனின் மனைவி மாலா அளித்த புகாரின் பேரில், லாரி ஓட்டுநர் சண்முகம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலை நேரங்களில் சாலைகளில் வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.