Advertisement

மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் கோவில் தேர் திருவிழா: பக்தி பரவசத்துடன் வடம் பிடித்த பக்தர்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான பெரியதேர் திருவிழா இன்று அலைகடலெனத் திரண்ட பக்தர்கள் முன்னிலையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூன் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த ஆன்மீகப் பெருவிழாவில், நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிம்ம வாகனம், சூரிய பிரபை, கருட சேவை, அனுமந்த வாகனம், சேஷ வாகனம், யாழி வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கருணாகர பெருமாள் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

விழாவின் முக்கியத் திருநாளான நேற்று இரவு, பெரிய பெருமாளான ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர், இளவல் லட்சுமணன் மற்றும் அன்னை சீதாதேவி ஆகிய சுவாமிகளுக்குப் பலவண்ண மலர்களால் கண் கவரும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளித்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று, விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாகக் கருணாகர பெருமாள் உபயநாச்சிமார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட பெரிய தேரில் எழுந்தருளினார்.

Advertisement

அப்போது அங்குத் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என விண்ணதிரும் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, பக்தி பரவசத்துடன் வடம் பிடித்துத் தேரை இழுத்தனர். மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆன்மீக அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்தத் தேர்த் திருவிழாவையொட்டி, காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement