Advertisement

கூடுவாஞ்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு: வியாபாரிகள் மறியல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் வந்தபோது, எதிர்ப்பு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கூடுவாஞ்சேரியில் பரபரப்பு ஏற்பட்டது.

🚧 ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிர்ப்பு!
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக நகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் இருந்து நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் வரை ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருவதுடன், ஏராளமான தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.

Advertisement

🚗 போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!
இச்சாலை முன்பு இருவழிச் சாலையாக இருந்த நிலையில், நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோதும் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். சில நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

🛑 வியாபாரிகள் திடீர் சாலை மறியல்!
அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததை அறிந்ததும், சாலையோரத்தில் கடைகள் நடத்தி வரும் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுவாஞ்சேரி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றி, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி கமிஷனர் லதா சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சம்பவத்தால் கூடுவாஞ்சேரி பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement