Advertisement

கழிப்பட்டூரில் நீர்நிலையில் கட்டுமானம்? கலெக்டர் ஆய்வு செய்ய கோரிக்கை

முட்டுக்காடு ஊராட்சியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கழிப்பட்டூர் பகுதியில் நீர்நிலை இடத்தில் தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

🏗️ நீர்நிலை பகுதியில் கட்டுமானப் பணி?
திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கழிப்பட்டூர் பகுதியில், ஓ.எம்.ஆர்., சாலையையொட்டி தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த இடத்தை குத்தகைக்கு பெற்றுள்ள தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிக்காக டி.டி.சி.பி., அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முட்டுக்காடு ஊராட்சி நிர்வாகத்திடமும் கட்டுமான அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.

Advertisement

💧 ஊராட்சி அனுமதி மறுப்பு!
கட்டுமானம் நடைபெறும் இடத்தின் ஒரு பகுதி நீர்நிலையை சார்ந்துள்ளதாக கூறி, ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்துள்ளது. இதுதொடர்பாக திருப்போரூர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையிலும், சர்வே எண் 108/1, ‘ஓடை அரசு புறம்போக்கு’ என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கட்டுமானப் பணிக்கு எதிராக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊராட்சி அனுமதி பெறப்படாத நிலையிலும் கட்டுமானப் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

🔎 கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய கோரிக்கை!
இதனால், கழிப்பட்டூர் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணி நீர்நிலை இடத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறதா அல்லது வேறு நிலத்தில் நடைபெறுகிறதா என்பதை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, வருவாய் பதிவுகளில் ஓடை அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்கள் மற்றும் தற்போதைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து முட்டுக்காடு ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிப்பட்டூர் பகுதியில் உள்ள குறிப்பிட்ட இடம் சிறுசேரி சிப்காட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதைப் பெற்ற தனியார் நிறுவனம் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். நீர்நிலையை சார்ந்த பகுதி என்பதால் ஊராட்சி அனுமதி வழங்க மறுத்தபோதும், அனுமதி பெறாமல் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement