பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரை பதிவு செய்யாதவர்கள், வரும் 26.09.2026 வரை பெயரை பதிவு செய்து கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
👶 பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு அவசியம்!
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமையாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969ன் வழிவகைகளின்படி, குழந்தையின் பிறப்பை பதிவு செய்வதுடன், பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயரையும் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான சான்றிதழாகும். பிறப்பு சான்றிதழில் பெயர் இருப்பது பள்ளியில் சேருதல், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பெறுவதற்கும், வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதற்கும் முக்கியமான ஆவணமாக உள்ளது.
📋 பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு விதிமுறைகள்
குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால், பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு பதிவாளரிடம் அளித்து, எவ்வித கட்டணமும் இன்றி பெயரை பதிவு செய்திடலாம். 12 மாதங்களுக்குப் பிறகு 15 ஆண்டுகளுக்குள், ரூ.200 தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரை பதிவு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு மேல் பெயரை பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
⏰ செப்.26 வரை கூடுதல் வாய்ப்பு
இந்நிலையில், பிறப்பு சான்றிதழ்களில் பெயர்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பதால், பொதுமக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 26.09.2026 வரை பெயர் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்யாதவர்கள், பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி ஆணையர், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது பேரூராட்சி அலுவலரை அணுகி பெயரை பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை செப்டம்பர் 26ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.












