Advertisement

இந்தியாவில் முதல்முறை: ஜப்பானின் ‘கியூ டெங்கா’ டெங்கு தடுப்பூசிக்கு அதிரடி அனுமதி!

இந்தியாவில் நாளுக்கு நாள் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜப்பானின் புகழ்பெற்ற டகேடா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் (Takeda Biopharmaceuticals) நிறுவனம் தயாரித்துள்ள ‘கியூ டெங்கா’ (QDENGA) என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (DCGI) முறைப்படி சந்தை அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவ வரலாற்றிலேயே டெங்கு நோய்க்கு எதிராகப் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ள ‘முதல் தடுப்பூசி’ என்ற மாபெரும் மைல்கல் சாதனையை கியூ டெங்கா படைத்துள்ளது. கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் காரணமாகத் தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.

இந்த உயிர்க்கொல்லி நோயைக் கட்டுப்படுத்தப் பல நாடுகளும் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த நிலையில், ஜப்பானின் டகேடா நிறுவனம் உருவாக்கிய ‘கியூ டெங்கா’ (TAK-003) தடுப்பூசி சர்வதேச அளவில் மிகச் சிறந்த பலனைத் தந்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், இந்திய மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை விதிகளின் கீழ் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (DCGI) அதிரடியாக ஒப்புதல் ஆணை வழங்கியுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க அனுமதி குறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், கியூ டெங்கா தடுப்பூசியானது 4 வயது முதல் 60 வயது வரையிலான நபர்களுக்குச் செலுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு வைரஸின் நான்கு வகையான சீரோடைப் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) பாதிப்புகளிலிருந்தும் இந்த ஒரே தடுப்பூசி வீரியமிக்கப் பாதுகாப்பை வழங்கும். முன்னதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இதுவரை பாதிப்பு ஏற்படாதவர்களுக்கும் கூட எவ்வித முன் பரிசோதனைகளும் (Pre-vaccination screening) இன்றி நேரடியாக இத்தடுப்பூசியைச் செலுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தோலடித் தடுப்பூசியாக (Subcutaneous Injection) 0.5 மி.லி அளவில் மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்களாக இது செலுத்தப்பட வேண்டும்.

Advertisement

சர்வதேச அளவில் 28,000க்கும் மேற்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட 19 கட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் இந்திய மக்களிடையே பிரத்யேகமாக நடத்தப்பட்ட 3-ஆம் கட்டப் பரிசோதனைத் தரவுகளின் அடிப்படையிலேயே இத்தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டக்கூடியது என உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரேசில், இந்தோனேசியா உட்பட உலகெங்கிலும் 43 நாடுகளில் 3.2 கோடி டோஸ்களுக்கு மேல் விநியோகிக்கப்பட்டுள்ள கியூ டெங்கா தடுப்பூசிக்குத் தற்போது இந்தியாவிலும் அனுமதி கிடைத்துள்ளதால், விரைவில் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது நாட்டின் சுகாதாரத் துறை கட்டமைப்பிற்குப் புதிய வலிமையையும், டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களுக்குப் பெரும் பாதுகாப்பையும் அளிக்கும் என மருத்துவ நிபுணர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement