அச்சிறுபாக்கம் அருகே எடையாளம் ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த எல்லையம்மன் கோவில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அதிகாரிகளால் நேற்று இடித்து அகற்றப்பட்டது.
🛕 கோவில் கட்டப்பட்டதாக புகார்
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட எடையாளம் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரிக்கரை உள்ளது. அதன் அருகே நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக எல்லையம்மன் கோவில் கட்டப்பட்டு வந்தது. கோவில் அமைந்திருந்த பகுதியைச் சுற்றி 14க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கோவில் மற்றும் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை அகற்றக்கோரி எடையாளம் கிராம மக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ⚖️
⚖️ நீதிமன்ற உத்தரவு
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீர்நிலை புறம்போக்கு பகுதியில் அமைந்திருந்த கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீடுகளை அகற்ற உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நீர்வளத்துறை அதிகாரிகள் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில், அதிகாரிகள் நேரடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் எடையாளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 📢
🚜 கோவில் அகற்றம்; வீடுகளுக்கு மாற்று இடம் கோரிக்கை
அச்சிறுபாக்கம் பாசனப்பிரிவு உதவி செயற்பொறியாளர் ராஜதிலக் மற்றும் வட்டாட்சியர் பெருமாள் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் எல்லையம்மன் கோவிலை இடித்து அகற்றினர். தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள 14 வீடுகளையும் அகற்ற அதிகாரிகள் முயன்றனர். அப்போது வீட்டு உரிமையாளர்கள், தங்களுக்கு வேறு இடம் இல்லை என்பதால், மாற்று இடம் வழங்கி பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு அதிகாரிகள், மாற்று இடம் மற்றும் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 🏠












