செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தனது ஹெல்மெட் திருடு போகாமல் இருக்க அரசு கைவிலங்கைப் பூட்டி வைத்த காவலரின் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்களின் உடைமைகளுக்கும் உயிருக்கும் முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே, காவலர் ஒருவர் தனது சொந்தத் தலைக்கவசத்திற்கு (ஹெல்மெட்) அரசு முத்திரையிடப்பட்ட கைவிலங்கைப் பூட்டி வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பையும் காரசார விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘TN 21 AB 6399’ என்ற பதிவெண் கொண்ட இருசக்கர வாகனத்தில், அரசு முத்திரையுடன் கூடிய கைவிலங்கைப் பயன்படுத்தி ஹெல்மெட் ஒன்று வாகனத்தின் கைப்பிடியோடு சேர்த்துப் பூட்டி வைக்கப்பட்டிருந்தது. புகார் அளிக்க வந்த பொதுமக்களின் கண்களில் இந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சி பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் காவல் நிலைய வளாகத்தில் காட்டுத்தீ போலப் பரவியது.
குற்ற வழக்குகளில் சிக்கும் கொடூரக் குற்றவாளிகள் மற்றும் கைதிகளை நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் தப்பியோடாமல் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய அரசின் மிக முக்கியமான சொத்தான கைவிலங்கை, ஒரு காவலர் தனது சொந்த தலைக்கவசம் திருடு போகாமல் இருக்கப் பூட்டி வைத்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே ஒரு காவலரின் ஹெல்மெட்டுக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை நிலவுகிறதா என்றும், தங்களது உடைமையைப் பாதுகாக்கவே கைவிலங்கை நாடும் இவர்கள் பொதுமக்களின் உடைமைகளை எங்ஙனம் பாதுகாப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது பல நேரங்களில் கைவிலங்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் சூழலில், அரசு உபகரணத்தைத் தனது சுயநலப் பயன்பாட்டிற்குப் பூட்டி வைத்திருப்பது காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் செயலாக உள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய வளாகத்திலேயே அரங்கேறியுள்ள இந்த அலட்சியப் போக்கு குறித்து மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, ‘TN 21 AB 6399’ வாகனத்தின் உரிமையாளரான சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.












