Advertisement

டெல்லி நோக்கி மாபெரும் பேரணி – சிபிஐ வீரபாண்டியன் கொந்தளிப்பு!

கரூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் எச்சரித்துள்ளார்.

உலகில் தலைசிறந்த நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைப் பெற்றுள்ள இந்தியாவில், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையே போதுமானது என்றும், தொகுதி மறுவரையறை என்பது அதிகாரத்தை நீண்ட காலத்திற்குக் குவித்து வைக்கும் மத்திய அரசின் மாபெரும் சூழ்ச்சி என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற அக்கட்சியின் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisement

அப்போது அவர் கூறுகையில், கல்வி மற்றும் மருத்துவத்தை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும், தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டத்தை அறவே ஒழிக்க வேண்டும், மற்றும் மத்திய அரசு அதிகாரங்களைக் குவிப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் நடைப்பயணம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த உரிமைப் பயணம் ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லியில் தேசியக் கொடியேற்றத்துடன் நிறைவடையும் என்றும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்டப் பேரணியில் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் அணிதிரண்டு பங்கேற்பார்கள் என்றும் அவர் முழங்கினார்.

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்துக் காட்டமாகப் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் எந்தவொரு முறையான விவாதமுமின்றி, எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல், தங்களுக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்துவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல என்று சாடினார். மத்திய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கினால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement