சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு எவ்வித நிவாரண அறிவிப்பும் இல்லாதது பெருத்த ஏமாற்றமளிப்பதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலவச மின்சார மானியத்திற்கு ரூ.7,432 கோடி மற்றும் மண்வளப் பாதுகாப்பு, பருத்தி மறுமலர்ச்சி, ‘ஏஐ உழவர் செயலி’ போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகவும், மற்ற விவசாயிகளின் கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அதுபற்றிய எந்தவொரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது அதிர்ச்சியளிக்கிறது.
எல்-நினோ பாதிப்பு மற்றும் குறுவை சாகுபடி பொய்த்ததால் வருமானமின்றித் தவிக்கும் விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எந்தவொரு நிவாரண நிதியும் அறிவிக்கப்படவில்லை. மேலும், நெல் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் விவசாயத் தொழிலாளர்களின் நலன் சார்ந்த சிறப்புத் திட்டங்களோ அல்லது வேலைவாய்ப்பு சார்ந்த அறிவிப்புகளோ முற்றிலும் இல்லாதது உழைக்கும் வர்க்கத்திற்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
வானிலை மாற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் துறையை மீட்கவும், கடனில் தவிக்கும் உழவர்களைப் பாதுகாக்கவும் பயிர்க்கடன்களை முழுமையாக ரத்து செய்து அரசு உரிய நிவாரணங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும் என மு. வீரபாண்டியன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.













