செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடலூர் பெரியகுப்பம் பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வீசிய சூறாவளிக் காற்றால் பைபர் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
கடலூர் பெரியகுப்பத்தைச் சேர்ந்த பழனி (57), நித்திஷ் (22), ராமன் (58), கவியரசன் (24) ஆகிய நான்கு மீனவர்கள் நேற்று அதிகாலை பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.
அதிகாலை சுமார் 3.30 மணியளவில் கடலில் திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் அவர்கள் சென்ற படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதனால் நான்கு பேரும் கடலில் தத்தளித்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் விரைந்து சென்று நான்கு பேரையும் மீட்டு பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
இந்த விபத்தில் மீனவர் பழனி பலத்த காயமடைந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.








