செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சியில் உள்ள செட்டிபுண்ணியம் குவாரியில் தேங்கியுள்ள மழைநீரை, நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தும் திட்டம் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன் இன்று (ஜூன் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மறைமலை நகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், செட்டிபுண்ணியம் குவாரியில் சேமிக்கப்பட்டுள்ள மழைநீரை பயன்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. இதற்கான தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ரீதியான முன்னேற்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திட்டத்தின் தற்போதைய நிலை, நீர் சேமிப்பு அளவு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் நடைமுறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு வட்டாட்சியர் வாசுதேவன், மறைமலை நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.




