செங்கல்பட்டு அருகே வாலிபர் தற்கொலைக்குக் காரணமான குற்ற உணர்ச்சியில் இளம்பெண் ரேவதி தூக்கிட்டுத் தற்கொலை; உடலை ஃப்ரீசரில் வைத்த குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை.
செங்கல்பட்டு அருகே வாலிபர் ஒருவரின் தற்கொலைக்குத் தான்தான் காரணம் என்ற கடுமையான குற்ற உணர்ச்சியிலும் மன உளைச்சலிலும் தவித்து வந்த 23 வயது இளம்பெண் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், தனது மனைவி ரோஸ், மகள் ரேவதி (23) மற்றும் 20 வயது மகனுடன் பிழைப்பு தேடி செங்கல்பட்டு பகுதிக்கு வந்து கடந்த 15 ஆண்டுகளாக உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் செங்கல்பட்டு அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரேவதியை ஒருதலையாகக் காதலித்து வந்ததோடு, தன்னை ஏற்குமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ரேவதி அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.
அந்த இளைஞரின் அகால மரணத்திற்குத் தான்தான் காரணம் என்று எண்ணி ரேவதி அன்றிலிருந்து கடுமையான மன அழுத்தத்திலும் தீராத குற்ற உணர்ச்சியிலும் தவித்து வந்துள்ளார். மகளின் மன உளைச்சலைப் போக்கி சூழலை மாற்றுவதற்காக, ரமேஷ் தனது குடும்பத்துடன் அம்மனம்பாக்கம் வீட்டை காலி செய்துவிட்டு செங்கல்பட்டு அருகே உள்ள அனுமந்தபுத்தேரி பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். மேலும் ரேவதியின் கவனத்தைத் திசைதிருப்ப அவரை வேலைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் தாய் உணவு சமைத்துக் கொடுக்க பெற்றோர் வேலைக்கும், தம்பி கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். மாலையில் பணி முடிந்து தாய் வீடு திரும்பியபோது, வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் ரேவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து சடலமாகக் தொங்கியதைக் கண்டு கதறி அழுதார். இதையடுத்து, காவல்துறைக்கு எவ்விதத் தகவலும் தெரிவிக்காமல் உடலைக் கீழே இறக்கிய குடும்பத்தினர், மறுநாள் அடக்கம் செய்வதற்காக ஃப்ரீசர் பாக்ஸில் வைத்து அஞ்சலி செலுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து ரகசியத் தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்து சென்று, மரணம் குறித்து காவல் நிலையத்திற்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை, இது தற்கொலையா அல்லது கொலையா எனப் பெற்றோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். தொடர்ந்து ரேவதியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருதலைக் காதலால் இளைஞர் உயிரிழந்த துயரம், இளம்பெண்ணின் குற்ற உணர்ச்சியாக மாறி அவரது உயிரையும் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













