செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே 13 ஆண்டுகளாகப் பழுதாகிக் கிடக்கும் சாலையைச் சீரமைக்கக் கோரி பள்ளி மாணவர்கள் தவெக தலைவர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே 13 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் சாலையைச் சரிசெய்து தரக் கோரி, பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு கண்ணீர் மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மறைமலைநகர் அருகே சட்டமங்கலம் வழியாகக் காட்டாங்குளத்தூர் செல்லும் பிரதான சாலையில், சுமார் 200 மீட்டர் தூரம் வனத்துறைக்குச் சொந்தமான சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி செயல்பட்டு வருவதால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் இந்த சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி சாலை எவ்விதப் பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமல் முற்றிலும் சிதைந்து, பெருமளவில் குண்டும் குழியுமாகக் காணப்படுகிறது.

மழை பெய்யும் நேரங்களில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தடுமாறி விழுந்து எலும்பு முறிவு உள்ளிட்ட பலத்த காயங்களுக்கு உள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் அரசுத் துறைகள் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையைக் காரணம் காட்டி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகாரிகளிடம் முறையிட்டுத் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த பள்ளி மாணவர்கள், தவெக தலைவர் விஜய்க்கு விடுத்துள்ள உருக்கமான வீடியோ பதிவில், “விஜய் மாமா, எங்கள் கஷ்டத்தைக் கொஞ்சம் கேளுங்கள்; நீங்கள் நிச்சயம் சரிசெய்து தருவீர்கள் என்று நம்புகிறோம். இருசக்கர வாகனங்களில் ஏறி இறங்கிச் செல்லும்போது உடம்பு வலிக்கிறது, வாந்தி வருகிறது. நடந்து சென்றால் கனரக வாகனங்கள் எங்கள் சீருடை மீது சேற்றுத் தண்ணீரை இறைத்துவிடுகின்றன. மாலையில் சிறப்பு வகுப்புகள் முடிந்து திரும்பும்போது தெருவிளக்குகள் இல்லாததால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் நடமாடுகின்றன. தயவுசெய்து எங்களுக்கு இந்தச் சாலையை அமைத்துத் தாருங்கள் விஜய் மாமா” எனக் கண்ணீருடன் கதறியுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு சாலையைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













