பாலூர் மக்களின் 6 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று தாம்பரம் வழித்தடத்தில் புதிய அரசுப் பேருந்தை தொடங்கி வைத்து செங்கல்பட்டு எம்எல்ஏ இயக்கி ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாலூர் பகுதி பொதுமக்களின் 6 ஆண்டுகால நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுத் தொடங்கப்பட்ட புதிய அரசுப் பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர், தானே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கி ஆய்வு செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலூர் கிராம மக்கள் தங்கள் பகுதியிலிருந்து தாம்பரம் வரை சென்று வர நேரடிப் பேருந்து வசதி இல்லாமல் பல ஆண்டுகளாக மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி, தங்கள் ஊருக்கு நேரடி அரசுப் பேருந்து வசதி செய்து தர வேண்டும் எனப் பாலூர் பகுதி மக்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர், அதனை விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்திருந்தார்.
அதன்படி, பாலூர் பகுதியிலிருந்து புறப்பட்டு திம்மாவரம், ஒரகடம் மற்றும் மண்ணிவாக்கம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்படவுள்ள தடம் எண் ’55P’ கொண்ட புதிய அரசுப் பேருந்து சேவையின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர், புதிய பேருந்து சேவைக் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார்.
பேருந்து சேவை தொடங்கியதும், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்து தரமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதை உறுதி செய்யும் வகையில், “குடுங்க… நானே ஓட்டிப் பார்க்கிறேன்” எனக் கூறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தைச் சிறிது தூரம் ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த எளிய அணுகுமுறையையும் மக்கள் நலன் சார்ந்த அக்கறையையும் கண்டு அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தனர்.













