Advertisement

செங்கல்பட்டில் ஐடி ஊழியர் பைக் திருட்டு: லாக் உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

செங்கல்பட்டில் ஐடி ஊழியர் காமேஸ்வரனின் பல்சர் பைக்கை நள்ளிரவில் மர்ம நபர் லாக் உடைத்துத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு நகரில் தனியார் ஐடி நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் மிக லாவகமாக லாக் உடைத்துத் திருடிச் செல்லும் பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

செங்கல்பட்டு கைலாசநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமேஸ்வரன் (23). இவர் மறைமலைநகர் அருகே உள்ள மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் (IT) நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். காமேஸ்வரன் தனது வழக்கமான இரவுப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, தனது பல்சர் இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மாயமாகி திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காமேஸ்வரன் உடனடியாகச் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

Advertisement

அதில், நள்ளிரவு நேரத்தில் முகத்தை முழுமையாக மூடியபடி வரும் மர்ம ஆசாமி ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்துவிட்டு, சற்றும் பயமின்றி மிகக் குறுகிய வினாடிகளில் தனது கைகளாலேயே பல்சர் பைக்கின் ஹேண்டில் லாக்கை உடைத்து, வாகனத்தை லாவகமாகத் திருடிச் செல்லும் அதிர்ச்சி காட்சிகள் பதிவாகியிருந்தது தெரியவந்தது. இக்காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் காவல்துறையினர் முறையான ரோந்துப் பணிகளில் ஈடுபடாததே இத்தகைய தொடர் திருட்டுச் சம்பவங்களுக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டும் அப்பகுதி மக்கள், குற்றவாளியை உடனடியாகக் கைது செய்வதுடன் இரவு நேரப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement