தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் பிரதான 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கிளை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 5 வரை தொடர் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும், செவிலியர் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையிலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அரசாணை 204-ஐ ரத்து செய்தல்: ‘Re-Deployment’ (மறு ஒதுக்கீடு) என்ற பெயரில் செவிலியர்கள் இடையே ஆட்குறைப்பை வழிவகுக்கும் அரசாணை எண் 204-ஐ உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நிலவும் தொகுப்பூதிய முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்.
ஒப்பந்தம் மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனைத்துச் செவிலியர்களையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த பொதுமக்களுக்கும் நோயாளிகளுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் அமைதியான முறையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தாங்கள் முன்வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளைத் தமிழ்நாடு அரசு விரைந்து பரிசீலித்து உரிய நடவடி்க்கை எடுக்க வேண்டும் எனச் சங்க நிர்வாகிகளும், போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.













