அருங்குணம் செல்லியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடித்திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாணம் மற்றும் வீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
🛕 கோலாகலமாக நடைபெற்ற ஆடித்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட அருங்குணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்திருவிழா இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, அம்மனுக்கு நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது.
🎆 தாய் வீட்டு சீருடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள்
திருவிழாவின் ஒரு பகுதியாக அப்பாக்குதி கிராம மக்கள் தாய் வீட்டு சீராக பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளை கைகளில் ஏந்தியபடி, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது வாணவேடிக்கை, தாரை, தப்பட்டை முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலம் விழாவுக்கு மேலும் சிறப்பை சேர்த்தது. இதையடுத்து, செல்லியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
🙏 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏவும், தவெக துணைப் பொதுச் செயலாளருமான மரகதம் குமரவேல், மாவட்டச் செயலாளர் பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவர் யோகேஷ் பாபு மற்றும் ஜமீன் எண்டத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் பூபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், நேற்று முன்தினம் இரவு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட செல்லியம்மனின் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.













