செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட முட்டுக்காடு படகு குழாமில் அமைக்கப்பட்டுள்ள மிதவை உணவக கப்பலை, தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் இன்று (12.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதவை உணவகத்தின் வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுற்றுலா பயணிகளுக்கு தரமான சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, சுற்றுலா ஆணையரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான ம.சு. சண்முகம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மு. வீரப்பன், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் சி. லட்சுமி பிரியா, மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முட்டுக்காடு படகு குழாம் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சென்னை – கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழித்தடத்தில், சென்னை நகரிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சுற்றுலா மையம், இயற்கை அழகும் சாகச அனுபவங்களும் நிறைந்த இடமாக விளங்குகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) நிர்வகித்து வரும் இந்த படகு குழாம், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.

முட்டுக்காடு ஏரியின் அமைதியான நீர்ப்பரப்பில் பல்வேறு வகையான படகு சவாரி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மோட்டார் படகு, ஸ்பீடு படகு, பெடல் படகு, ரோயிங் படகு உள்ளிட்ட பல வகை படகுகளில் பயணிகள் சவாரி செய்து மகிழலாம். இயற்கை எழில்மிகு சூழல், பசுமையான மரங்கள் மற்றும் பரந்த நீர்ப்பரப்பு ஆகியவை முட்டுக்காட்டின் தனிச்சிறப்பாகும். புகைப்பட ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசனையாளர்களுக்கு இது மிகவும் பிடித்தமான இடமாக உள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது.

சமீப காலங்களில் சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வகையில் பல புதிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மிதவை உணவக கப்பல் (Floating Restaurant) திட்டம் முக்கிய கவனம் பெற்றுள்ளது. நீரின் நடுவே உணவருந்தும் அனுபவத்தை வழங்கும் இந்த திட்டம், முட்டுக்காடு சுற்றுலா மையத்தின் மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.





