தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் பல்லாவரம் மற்றும் செம்மஞ்சேரி பகுதிகளில் சிறப்பு பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பு, அவசர கால உதவி எண்கள், காவல்துறையை எளிதில் அணுகும் வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டன.
மேலும், சமீப காலமாக அதிகரித்து வரும் ஆன்லைன் பண மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அறிமுகமில்லாத நபர்களின் தொலைபேசி அழைப்புகள், போலி வங்கி இணைப்புகள், OTP பகிர்வு, முதலீட்டு மோசடிகள் மற்றும் வேலைவாய்ப்பு மோசடிகள் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சமூக வலைதளங்களின் பாதுகாப்பான பயன்பாடு குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, ஆதார் எண், வங்கி கணக்கு விவரங்கள், OTP, கடவுச்சொற்கள் மற்றும் பிற தனிப்பட்ட தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், சமூக வலைதளங்களில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை திறக்க வேண்டாம் என்றும், தெரியாத நபர்களின் நட்பு அழைப்புகள் மற்றும் செய்திகளை கவனமாக கையாள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கும் முயற்சிகளில் காவல்துறையுடன் ஒத்துழைக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரித்தது.





