“இன்னமும் அப்பா ஆட்சி நடக்குதுன்னு நினைப்போ?” – உதயநிதியை வறுத்தெடுத்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்.!

0
8

“வேண்டுமென்றே டிரான்ஸ்பார்மர்களை செயலிழக்க வைக்கிறாங்க!” – மின்தடைக்கு பின்னால் இருக்கும் சதி அம்பலம்: கடந்த ஆட்சி முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் ரெடி என நிர்மல் குமார் அதிரடி!
சென்னை, மே 25: “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்னமும் அவரது அப்பாவின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்; அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து மக்களைப் பார்க்க வேண்டும்” என்று மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மின்துறையின் விநியோக நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஐஏஎஸ் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். கூட்டத்தில் டெண்டர் நடைமுறைகள் மற்றும் மின் விநியோகப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், எதிர்க்கட்சிகளின் விமரிசனங்களுக்கு அக்குவேறாகப் பதிலடி தந்தார். அவர் பேசியதாவது, “கடந்த திமுக ஆட்சியில் ஒரு சில நிறுவனங்களுக்கு ஒருதலைப்பட்சமாக டெண்டர் வழங்கி விதிமீறல்கள் செய்துள்ளனர். தமிழ்நாடு மின்சாரத் துறை சரிவிற்குச் சென்றதற்கு அவர்கள்தான் காரணம்; அதற்கான ஆதாரங்களைத் திரட்டியுள்ளோம். தற்பொழுது நிலவும் மின்தடையைச் சரிசெய்ய 7 ரோந்து வாகனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வேண்டுமென்றே டிரான்ஸ்பார்மர்களை செயலிழக்கச் செய்துள்ளனர், அவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு, “கோவையில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் மதுரையில் நடந்த கொலை சம்பவங்களில் முதலமைச்சரின் உத்தரவின்படி சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக-விற்கு கடைக்கோடி கிராமங்கள் மட்டுமன்றி ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட மக்கள் வாக்களித்து இந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர்” என்று முழங்கினார்.