Advertisement

“திமுக-விடம் பாடம் கற்க வேண்டாமா?”: ஆளுநர் மாளிகை பயணத்தால் விமர்சனத்தில் சிக்கும் விஜய்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகளில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்து வரும் முடிவுகள் அவர் ஒரு ‘அரசியல் கத்துக்குட்டியோ’ என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெறும் இரண்டு நாட்களில் மூன்று முறை ஆளுநரைச் சந்தித்தது விஜய்யின் முதல் சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது. 107 எம்.எல்.ஏ-க்களை (தற்போதைய நிலவரப்படி 108) தன் வசம் வைத்திருக்கும் ஒரு தலைவர், இவ்வளவு அவசரமாக ஆளுநர் மாளிகையின் படிக்கட்டுகளை ஏறி இறங்குவது “ஆட்சி அதிகாரத்திற்காகத் தவிக்கிறார்” என்கிற பிம்பத்தையே மக்கள் மத்தியில் விதைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இதே சூழலில் திமுக இருந்திருந்தால், ஆளுநரைச் சுற்றி வந்து நேரத்தை வீணடித்திருக்க மாட்டார்கள். தனிப்பெரும் கட்சி என்கிற தகுதியை வைத்துக்கொண்டு, ‘Mandamus’ மனு ஒன்றைத் தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம் ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். சட்ட நுணுக்கங்களைக் கையாளத் தெரியாததே தவெக-வின் பலவீனமாகக் காட்டப்படுகிறது.

அமமுக எம்.எல்.ஏ காமராஜின் ஆதரவு கடிதம் விவகாரம் விஜய்யின் இமேஜை வெகுவாகச் சிதைத்துள்ளது.
கார் ஒன்றில் அமர வைத்து அவசரமாகக் கையெழுத்து வாங்கிய வீடியோவை ஆதாரமாக வெளியிட்டது அமேச்சூர் அரசியலின் உச்சம் என விமர்சிக்கப்படுகிறது. 116 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை மட்டுமே வைத்துக்கொண்டு, 120 என ஆளுநரிடம் தவறான கணக்கு காட்டியது மாபெரும் வரலாற்றுத் தவறு எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

Advertisement

ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏ-க்களை அழைத்துச் செல்வதை விடுத்து, தனது நண்பர்களையும், அதிகார மையத்தில் இல்லாதவர்களையும் விஜய் அழைத்துச் சென்றது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் இருந்தும், அவர்களின் ஆலோசனைகளை விஜய் முறையாகப் பயன்படுத்துகிறாரா அல்லது அவரைச் சுற்றியிருப்பவர்கள் தவறான ஐடியாக்களைத் தருகிறார்களா என விமர்சகர்கள் கிண்டலடிக்கின்றனர்.

டி.டி.வி. தினகரன் முன்வைத்துள்ள ‘குதிரை பேரம்’ மற்றும் ‘கடத்தல்’ புகார்களுக்கு இதுவரை தவெக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் வராதது, அந்தக் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போலவே உள்ளது. சட்ட ரீதியாகப் போராடுவதை விடுத்து ஆளுநர் மாளிகையைச் சுற்றுவது விஜய்யின் அரசியல் பலவீனத்தையே காட்டுவதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement