Advertisement

வேடந்தாங்கல் அரசு பள்ளியில் சிதிலமடிந்த சமையல் அறை

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், சேதமடைந்து இடியும் நிலையில் உள்ள பழைய சமையல் கூடத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேடந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வினாயகநல்லூர், சித்தாத்தூர், சித்திரக்கூடம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்கில் 25 ஆண்டுகளுக்கு முன்பு சமையல் கூடம் கட்டப்பட்டிருந்தது.

Advertisement

காலப்போக்கில் அந்த கட்டிடம் சேதமடைந்து இடியும் நிலைக்கு தள்ளப்பட்டதால், புதிய சமையல் கூடம் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிய சமையல் கூடம் கட்டப்பட்டு தற்போது மாணவர்களுக்கு அங்கு மதிய உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பழைய சமையல் கூடம் இன்னும் அகற்றப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. கட்டிடம் விஷ ஜந்துகளின் கூடாரமாக மாறியுள்ளதுடன், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு மதுபாட்டில்கள் வீசப்படுவதால் பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.

Advertisement

மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வருகை தரும் சூழலில், சேதமடைந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன்பே பழைய சமையல் கூடத்தை இடித்து அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement