செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் தொடர்பாக நடந்த இரு சம்பவங்களில், ஒரு பேருந்து சாலையில் கவிழ்ந்ததில் 25 பயணியர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மற்றொரு சம்பவத்தில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 14 வயது பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
🚨 புலிப்பாக்கத்தில் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து நேற்று காலை ஜி.எஸ்.டி., சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 25 பயணியர் பயணம் செய்தனர். செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. பேருந்தில் பயணம் செய்த அனைவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
🚑 போலீசார் விசாரணை; போக்குவரத்து பாதிப்பு
விபத்து குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து மீட்கப்பட்டது. விபத்து காரணமாக ஜி.எஸ்.டி., சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
💔 படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் உயிரிழப்பு
மற்றொரு சம்பவத்தில், மாமல்லபுரம் அடுத்த குன்னப்பட்டு பகுதியைச் சேர்ந்த தீனா (14), மாமல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக காரணையில் இருந்து அரசு பேருந்தில் பயணம் செய்தார். பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. வடகடம்பாடி பகுதியில் காலை 8:45 மணியளவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்தார். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் நேரங்களில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் தனது நண்பருடன் சென்றுகொண்டிருந்த சதீஷ் சாலை யோரம் நிறுத்தப்பட்டிருந்த ‘டாடா ஏசி’ சரக்கு வாகனம் மீது மோதியுள்ளார். படுகாயமடைந்த சதிஷ் குமாரை அங்கிருந்தோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விக்னேஷ் சிறு காயங்களுடன் தப்பினார். விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் செங்கல்பட்டில் தங்கி புலிப்பாக்கத்தில் உள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார்.










