கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களின் வாடகை பல மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து, அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்போர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
🛕 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் குடும்பங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்–கூடுவாஞ்சேரி நகராட்சியில் பழமைவாய்ந்த நந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகிலுள்ள இடத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை அடிப்படையில் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாத வாடகையாக ரூ.460 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு வாடகை ரூ.3,700 ஆக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
💰 பல மடங்கு உயர்ந்த வாடகையால் அதிருப்தி
வாடகை திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டதை ஏற்க முடியாது என குடியிருப்போர் தெரிவித்தனர். வாடகையை குறைக்க வேண்டும் என்று அப்போதைய அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறினர். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் உயர்த்தப்பட்ட வாடகையை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 2022 முதல் தற்போது வரையிலான நிலுவைத் தொகையை அரசு நிர்ணயித்த வாடகை அடிப்படையில் ஒரே தவணையாக செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை சார்பில் குடியிருப்போருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
🚨 அதிகாரியை முற்றுகையிட்டு வாடகையை குறைக்க கோரிக்கை
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குடியிருப்போர் கூறினர். இதையடுத்து, நேற்று அப்பகுதிக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்போர் முற்றுகையிட்டு, வாடகை உயர்வை திரும்பப் பெறவும், நிலுவைத் தொகையில் சலுகை வழங்கவும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிலுவைத் தொகை ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பதாகவும், பல தலைமுறைகளாக வசித்து வரும் நிலையில் திடீரென இத்தொகையை செலுத்துவது கடினம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாடகை உயர்வை மறுபரிசீலனை செய்து சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.











