Advertisement

செங்கல்பட்டு: குளத்தில் சடலம், விபத்தில் 2 பேர் பலி, நண்பர் கொலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த மூன்று சம்பவங்களில், குளத்தில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அச்சிறுபாக்கம் சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; ஊரப்பாக்கத்தில் தாயம் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டவர் உயிரிழந்ததால் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

🌊 குளத்தில் வாலிபர் சடலம் மீட்பு

திருப்போரூர் அடுத்த மேலையூர் ஊராட்சிக்குட்பட்ட நந்தம்பாக்கம் கிராமத்தில் குளம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய முத்து (37), குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலை முத்து, நண்பர்கள் ஆனந்தபாபு (45), தேவேந்திரன் (60) ஆகியோருடன் குளத்தின் அருகே மது அருந்தியுள்ளார். போதையில் தேவேந்திரன் அங்கேயே தூங்கிய நிலையில், ஆனந்தபாபு அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பியபோது முத்துவை காணவில்லை. பின்னர் குளத்தில் முத்து இறந்த நிலையில் மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த திருப்போரூர் போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். முத்து மதுபோதையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

🏍️ கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி 2 பேர் பலி

அச்சிறுபாக்கம் அருகே காந்திநகர் பகுதியில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடமலைப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார் செந்தில்குமார் (45), தனது நண்பர்களான சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (37), காளிதாஸ் (34) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்னைக்கு சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது. இதில் செந்தில்குமார், மணிகண்டன் உயிரிழந்தனர். காளிதாஸ் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அச்சிறுபாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சாலையோர உணவகங்களில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் கனரக வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதாகவும், இதனால் விபத்து அபாயம் அதிகரிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

🪨 தாயம் விளையாடியபோது தகராறு: நண்பர் அடித்து கொலை

ஊரப்பாக்கம் நேதாஜி நகரில் தாயம் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கல்லால் தாக்கிய நபர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசு (47) மற்றும் அவரது நண்பர் வேதகிரி (54) உள்ளிட்டோர் கடந்த மாதம் 26ஆம் தேதி மாலை தாயம் விளையாடியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வேதகிரி, அருகில் கிடந்த கல்லால் வாசுவை தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த வாசு, கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 23 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, கிளாம்பாக்கம் போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்திருந்த வேதகிரி மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement