“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நான் கடுமையாக விமர்சித்து வந்த போதிலும், அவரது மகன் ராகுல் காந்தி பெருந்தன்மையோடு எனது நூலை வெளியிட்டது என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்” என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) பொதுச்செயலாளர் வைகோ நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ (Vaiko in Parliament) என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
நிகழ்வில் உரையாற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த கால அரசியல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். “கடந்த காலத்தில் நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நான் மிகக் கடுமையாக விமர்சித்துச் உரையாற்றியிருக்கிறேன். ஆனால், அந்தப் பழைய கசப்பான சம்பவங்கள் எதையும் மனதில் கொள்ளாமல், எனது 30 ஆண்டுகால நாடாளுமன்றப் பணிகளை மதிப்பீடு செய்து, ராகுல் காந்தி நேரில் வருகை தந்து எனது நூலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது அவரது பண்பாட்டையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது” எனப் புகழாரம் சூட்டினார்.
மேலும், இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காக்கப் போராடும் தேசியத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றிணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை வெளியிட்டது, தனது நீண்டகால அரசியல் பயணத்திற்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.













