வடக்கு வாயலூரில் புதிய ரேஷன் கடை திறக்கவில்லை என புகார்

0
7

பவுஞ்சூர் அருகே வடக்கு வாயலூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வடக்கு வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட கருப்பூர், மாவடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஆசாரி தெருவில் ரூ.9.88 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து ஓராண்டு கடந்தும், இதுவரை புதிய கட்டடத்தில் ரேஷன் கடை செயல்படத் தொடங்கவில்லை. இதனால், அரசு நிதியில் கட்டப்பட்ட கட்டிடம் பயன்பாடின்றி வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக செயல்பட்டு வந்த பழைய ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்ததால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. புதிய கட்டிடம் தயார் நிலையில் இருந்தும் திறக்கப்படாததால், அரசு நிதியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு நீண்ட காலமாக பூட்டியே கிடக்கிறது. மறுபுறம் வாடகை கட்டடத்தில் ரேஷன் கடை இயங்குவதால் தேவையற்ற செலவு ஏற்படுகிறது. புதிய கட்டடத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கடையை திறந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.