அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 10,000 செவிலியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும் வரும் ஜூலை 21-ஆம் தேதி சென்னை டி.எம்.எஸ். (DMS) வளாகத்தில் மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறவுள்ளதாகத் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் அவசரச் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. சுபின் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது 14,000 நிரந்தரச் செவிலியர்களும், சுமார் 10,000 தொகுப்பூதியச் செவிலியர்களும் அசாத்திய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகத் தொகுப்பூதியச் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், செவிலியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் நாங்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தால் 6,500 தொகுப்பூதியச் செவிலியர்களுக்கு உடனடியாக பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் எனத் தங்களது தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்திருந்தது. ஆனால், இந்த வாக்குறுதியைச் சீரமைக்க வேண்டிய அரசு அதிகாரிகள், அதனை விட்டுவிட்டு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களை ‘மாற்றுத் திட்டம்’ என்ற பெயரில் தேவையின்றிப் பணி மாற்றம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இருக்கும் செவிலியர்களே இவ்வாறு அலைக்கழிக்கப்படுவதால், அவர்களின் பணி நிரந்தரக் கோரிக்கை சாத்தியமில்லாமல் முடங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” என வேதனை தெரிவித்தார்.
மேலும், “நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்க, அரசு தரப்பு எங்களிடம் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தாமல், போராட்டத்திற்கும் சங்கத்திற்கும் தொடர்பே இல்லாத நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் மூலம் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்; சுகாதாரத்துறைச் செயலாளரையும் சந்தித்துக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எனவே, எங்களோடு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், வரும் 21-ஆம் தேதி சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்கும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தைச் சற்றும் தயக்கமின்றி நடத்துவோம். அதன்பின்னரும் நடவடிக்கை இல்லையெனில் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு வேகத்தில் கொண்டு செல்வோம்” என எச்சரித்தார்.












