100-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதியளித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கு உரிய அனுமதி வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “அதிகாரிகளின் ஆய்வு என்ற பெயரில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக 100-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு முடங்கிக் கிடந்தன. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எங்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாங்கள் முன்னெடுத்த தொடர் போராட்டங்களை அரசு கனிவுடன் பரிசீலித்தது” என்று குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில், பட்டாசுத் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடனடியாகத் தலையிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், முதற்கட்டமாக 40-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயங்குவதற்கான தடையில்லா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உரிய உரிமம் பெற்ற 25 முன்னணி ஆலைகள் மற்றும் பிற துணை ஆலைகளும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப் பெரிதும் உதவியாக இருந்த அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோரை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பட்டாசுத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் வேலைவாய்ப்பைப் பெறுவர் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.













