Advertisement

தொகுதி மறுவரையறை அநீதிக்கு எதிராகக் குரல்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்!

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர்க்கான 33% இடஒதுக்கீடு தொடர்பாகச் சட்டமன்றத் தீர்மானத்தை வலியுறுத்திப் பிரதமர் மோடிக்குத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதி மறுவரையறை குறித்துத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் பரிசீலித்து Dailythanthi, அதற்கேற்ப உரிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (13.08.2026) விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Advertisement

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த 12.08.2026 அன்று தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர்க்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டுச் சிறப்புத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையை மாற்றாமல் 543 ஆக நிரந்தரமாகத் தொடரச் செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான தற்போதைய நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரப் பகிர்வை ஏற்கெனவே உள்ளவாறே பாதுகாக்கவும், மக்களவைக்கும் மாநிலங்களவைக்கும் இடையேயான விகிதத்தைப் (2.2 : 1) பேணவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தற்போதைய 543 உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தத் தேவையான அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின்னர், அரசியலமைப்பின் 81(2)(a)-ஆம் சட்டப்பிரிவைப் பின்பற்றித் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், 1967-இல் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது போன்றதொரு வரலாற்றுப் பிழை மீண்டும் நிகழும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தி, சிறப்பான சுகாதார மற்றும் சமூக நலத் திட்டங்களின் மூலம் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள தென்னிந்திய மாநிலங்களுக்கு, 1971-ஆம் ஆண்டிற்குப் பிந்தைய மக்கள்தொகை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தொகுதி மறுவரையறை நடவடிக்கையும் பெரும் அநீதியாக அமையும் என முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தீர்மானத்தின் நகலையும் இணைத்து அனுப்பியுள்ள தமிழக அரசு, தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளைக் காக்கும் வகையில் மத்திய அரசு உரிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement