சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், 3 மாத சாதனைகள், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் மாநில உரிமைகளை காக்கும் அரசின் நிலைப்பாட்டை விளக்கிப் பேசினார்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் லஞ்ச லாவண்யம் இன்றி, மக்கள் நலம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமூகநீதியை மட்டுமே இலக்காகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது” என்று மாண்புமிகு முதலமைச்சர் சுதந்திர தின விழா உரையில் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், “தமிழ்நாட்டின் கொள்கைகள் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிராக எந்த முடிவு வந்தாலும், எத்தகைய சக்திகள் எதிர்த்து நின்றாலும் துணிவோடு நின்று எதிர்ப்போம். பொது வாழ்வில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை; மக்களின் நலனே எங்களுக்கு முதன்மையானது. முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தாலும் மக்களுக்குப் பயன்படும் திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். அந்த வகையில் அம்மா உணவகம் மற்றும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடர்ந்து தடையின்றிச் செயல்படுத்தப்பட்டு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று மாத காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர், “விவசாயிகளின் நலனைக் காக்கக் குறுவை சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு ரூ.134 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன் 150 நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறையில் பொதுமக்களுக்காக ‘நலம் ஏஐ’ (Nalam AI) செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதோடு, போக்குவரத்து வசதிக்காக 300 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. சமூக மாற்றத்தை நோக்கிய முக்கிய முன்னெடுப்பாக 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் அதிரடியாக மூடப்பட்டுள்ளன” என்றார்.
மேலும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய முதலமைச்சர், “பொதுமக்களின் அலைச்சலைக் குறைக்க ‘ஆளில்லா பத்திரப்பதிவு முறை’ விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளது. வருவாய்த் துறையில் விண்ணப்பிக்கும் அனைத்துச் சான்றிதழ்களும் 15 நாட்களுக்குள் காலதாமதமின்றி வழங்கப்பட்டு வருகின்றன. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க வாட்ஸ்அப் புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்டு, அரசுத் துறைகளில் லஞ்சத்தை வேரறுக்கத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாகக் கண்காணிக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இறுதியாகப் பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், “எல்லோரும் வாக்களித்துவிட்டோம், நம் அண்ணனை, தம்பியை, உங்கள் வீட்டுப் பிள்ளையை முதலமைச்சராக்கிவிட்டோம் என்று ஒதுங்கிப் போய்விடாதீர்கள். வாக்களித்ததோடு உங்களது கடமை முடிந்துவிட்டதாக எண்ணி விலகி நிற்க வேண்டாம். இந்த நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் மக்கள்தான். இனிமேல்தான் நீங்கள் அரசுடன் இணைந்து நிற்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களோடு கைகோர்த்துத் தமிழ்நாட்டை நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம்; அரசுக்கு எதிரான சக்திகளையும், மக்கள் விரோதச் சதிகளையும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து முறியடிப்போம்” என உணர்ச்சிபொங்கத் தனது உரையை நிறைவு செய்தார்.













