தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் ₹1,02,514 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 1.21 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
‘
தமிழகத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள்ளாகவே ₹1,02,514 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ (Vettri Tamil Nadu Investment Conclave 2026) நிகழ்வில் முதலமைச்சர் முன்னிலையில் ₹67,452 கோடி மதிப்பிலான 97 புதிய திட்டங்களுக்கான புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் மொத்தம் 104 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக மாநிலத்தில் 1,21,788 பேருக்கு நேரிடமாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன.
தரவு மையங்கள் (Data Centres) பிரிவில் அதிகபட்சமாக ₹26,417 கோடியும், வாகன உற்பத்தியில் ₹17,073 கோடியும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ₹15,787 கோடியும் முதலீடுகளாகக் கிடைத்துள்ளன. மேலும் ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் ₹22,268 கோடி அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை (FDI) உறுதி செய்துள்ளன. தொழில் வளர்ச்சியைச் சென்னை சுற்றுவட்டாரத்தைத் தாண்டி பிற மாவட்டங்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், ₹40,700 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் வளரும் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.













