Advertisement

மதுரையில் கலக்கிய அதிமுக பிரமுகர் பிறந்தநாள்: ரூ.20 லட்சம் கார் பரிசு, மெகா பிரியாணி விருந்து!

மதுரை பசுமலையில் அதிமுக மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. அவருக்கு அவரது மகன் ரூ.20 லட்சம் சொகுசுக் காரைப் பரிசளித்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பாவின் பிறந்தநாள் விழா, மதுரை பசுமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

Advertisement

பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இல்லத்தின் அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளும், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட கிரிக்கெட், வாலிபால் மற்றும் கபடி விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் சிறப்பம்சமாக, ராஜன் செல்லப்பாவின் மகனும் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலாளருமான ராஜ் சத்தியன், தனது தந்தைக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய சொகுசுக் காரைப் பரிசாக வழங்கினார். காரின் முதல் பயணத்தை அவரே ஓட்டிச் செல்ல, தொண்டர்களின் ஆரவாரத்துடன் பயணம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 10 அடி நீள பிரம்மாண்ட கேக் வெட்டி குடும்பத்தினர் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

Advertisement

விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மதுரைக்கே உரித்தான மெகா அசைவ விருந்து அளிக்கப்பட்டது. சுமார் 250 முதல் 300 கிராம் எடையுள்ள மெகா சிக்கன் லெக் பீஸ்கள், சுடச்சுடக் கரண்டி ஆம்லெட், சிக்கன் சுக்கா மற்றும் கமகமக்கும் மட்டன் பிரியாணி என தடபுடலாக வழங்கப்பட்ட விருந்தை அனைவரும் ரசித்து ருசித்தனர். ஆட்சியில் இல்லாத சூழலிலும் பசுமலை பகுதி முழுதும் அதிமுக கொடிகளுடன் களைகட்டிய இந்த விழா, மதுரை அதிமுக வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement