செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அரசுப் பள்ளி உள்கட்டமைப்பு திறப்பு விழாவில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக, த.வெ.க. அமைச்சர் ஒருவர் மக்களைச் சந்திக்காமல் அங்கிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பையும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெண்ட்ரச்சேரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ‘குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்’ கீழ் இரண்டு புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த புதிய கட்டிடங்களின் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், ஒரு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, குத்துவிளக்கு ஏற்றுவதற்காக அவர் தயாரான போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் திடீரென மின்வெட்டு (Power Cut) ஏற்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த அமைச்சர், உடனடியாக அருகில் திறக்கப்பட வேண்டியிருந்த மற்றொரு புதிய வகுப்பறைக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டித் திறக்காமலேயே, அங்கிருந்து அவசர அவசரமாகத் தனது காரை நோக்கிப் புறப்பட்டார்.
விழாவிற்குத் திரண்டிருந்த பள்ளி மாணவர்களையோ அல்லது தங்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு அளிக்கக் காத்திருந்த பொதுமக்களையோ நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்காமல், அமைச்சர் வேக வேகமாக வேறொரு நிகழ்வுக்குச் சென்றது அங்கிருந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமன்றி, விழாவின் போது அங்கிருந்த அரசுத் திட்ட அலுவலரின் உதவியாளர் ஒருவர், திட்ட அலுவலரின் காலணிகளை (Shoes) கைகளில் தூக்கிச் சென்ற அவலக் காட்சியும் அங்கிருந்தவர்கள் மத்தியில் கடும் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. ஓட்டளித்து வெற்றி பெறச் செய்த தங்களை மதிக்காமல் சென்ற அமைச்சர் எதற்காக இங்கு வர வேண்டும் எனப் பொதுமக்கள் ஆவேசமாகப் புலம்பியதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது.
அமைச்சர் ரிப்பன் வெட்டாமல் சென்ற அந்த மற்றொரு வகுப்பறைக் கட்டிடத்தை, மதுராந்தகம் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவர் கீதா கார்த்திகேயன் அங்கிருந்த தூய்மைப் பணியாளர்களை முன்னிலைப் படுத்தி, அவர்கள் மூலமாக ரிப்பன் வெட்டி அதிரடியாகத் திறந்து வைத்தார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி அவர் கொண்டாடியது அங்கிருந்த மக்கள் மத்தியில் பெரும் பேசும்பொருளாக மாறியது. “மக்களின் குறைகளைக் கேட்கப் பயந்து ஓடும் த.வெ.க. அமைச்சர்” எனப் பொதுமக்கள் அமைச்சரின் இந்தச் செயலுக்குச் சமூக வலைதளங்களிலும் தங்களது சரமாரி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.












