செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே கொட்டப்பட்டிருந்த மருத்துவ ஊசிகளை அகற்றப் பயந்து அதிகாரிகள் தீ வைத்ததால், அந்தத் தீ காப்புக்காடு முழுவதும் பரவி சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் புகைமூட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அருகே பரனூர் பகுதியில் கொட்டப்பட்டிருந்த ஆபத்தான மருத்துவக் கழிவுகளை அகற்றப் பயந்து, அரசு அதிகாரிகள் அதற்குப் பொறுப்பற்ற முறையில் தீ வைத்ததால், அந்தத் தீ அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட காப்புக்காடு பகுதி முழுவதும் பரவி எரியத் தொடங்கியுள்ளது. அதிகாரிகளின் இந்த விபரீத நடவடிக்கையால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதும் அடர்ந்த புகைமூட்டமாக மாறி, வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், காப்புக்காட்டிற்கு மிக அருகில் காலாவதியான மருத்துவ ஊசிகள் (சிரஞ்சுகள்) குவியல் குவியலாகக் கேட்பாரற்று கொட்டப்பட்டுக் கிடந்தன. அருகில் உள்ள காப்புக்காட்டில் இருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியே வரும் மான்கள், குரங்குகள் மற்றும் மயில்கள் போன்ற வனவிலங்குகள் சாலையைக் கடக்கும் போது, இந்த ஆபத்தான கூர்மையான ஊசிகள் அவற்றின் உடலில் குத்தி உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் வீடியோ ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த துறை சார்ந்த அதிகாரிகள் அந்த மருத்துவக் கழிவுகளை அகற்ற முயன்றனர். ஆனால், அங்கு கொட்டப்பட்டிருந்த ஊசிகள் மூடப்படாமல் மிக ஆபத்தாக நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அதைத் தங்களது கைகளால் அகற்றினால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனப் பீதியடைந்தனர். தங்களது நிர்வாகத் தவறை உடனடியாக மறைப்பதற்காக, முறையான எந்தவொரு பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், அந்த மருத்துவ ஊசிக் குவியலின் மீது பெட்ரோல் ஊற்றி அவசர அவசரமாகத் தீ வைத்து அழிக்க முற்பட்டனர்.
ஆனால், அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் வைத்த அந்தத் தீ, தற்பொழுது கட்டுப்பாட்டை மீறி அருகில் உள்ள காப்புக்காடு பகுதி முழுவதும் மளமளவெனப் பரவி எரியத் தொடங்கியுள்ளது. இதனால் சென்னை – திருச்சி மற்றும் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலைப் பகுதி முழுவதும் அடர்ந்த நச்சுப் புகைமூட்டமாகக் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, எதிரே வரும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்குப் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அந்தப் பகுதியைத் கடக்க முடியாமல் கடும் சிரமத்திற்கும் விபத்து அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளனர். தங்களது அலட்சியத்தை மறைக்கப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகே பொறுப்பற்ற முறையில் தீ வைத்துப் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












